ஹரிஹர வீரமல்லு – விமர்சனம்

நடிப்பு: பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், முரளி சர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, கபீர் பேடி மற்றும் பலர்
இயக்கம்: ஜோதி கிருஷ்ணா
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா & ஞானசேகர் வி.எஸ்
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்
இசை: எம்.எம்.கீரவாணி
தயாரிப்பு: ‘மெகா சூர்யா புரொடக்ஷன்’ ஏ.எம்.ரத்னம்
பத்திரிகை தொடர்பு: ரேகா

முகலாயர் ஆட்சிக்காலத்தில் – குறிப்பாக ஔரங்கசீப் ஆட்சி செய்த 17ஆம் நூற்றாண்டில் – இப்படக்கதை நிகழ்வதாக கற்பனையாகப் புனையப்பட்டிருக்கிறது.
ஆற்று நீரில் மிதந்து வரும் ஒரு பெட்டியில் அழகிய பச்சிளம் ஆண் குழந்தை இருக்கிறது. அது சிவநந்தா (சத்யராஜ்) – கௌசல்யா (ஈஸ்வரி ராவ்) தம்பதியருக்குக் கிடைக்கிறது. அவர்கள் அக்குழந்தைக்கு ‘ஹரி ஹர வீரமல்லு’ என்று பெயர் சூட்டி, வளர்த்து ஆளாக்குகிறார்கள்.
இளைஞர் ஹரி ஹர வீரமல்லு (பவன் கல்யாண்), இருப்பவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாதவர்களுக்கு வாரி வழங்கும் ’ராபின் ஹுட்’ ஆகவும், பலம் பொருந்திய போர் வீரராகவும் திகழ்கிறார்.
ஒரு கட்டத்தில், டெல்லி செங்கோட்டையில் உள்ள முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் (பாபி தியோல்) சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள, விலை மதிப்பில்லாத, கிடைப்பதற்கரிய கோஹினூர் வைரத்தைத் திருட, தன் சகாக்களுடன் புறப்பட்டுச் செல்கிறார் ஹரி ஹர வீரமல்லு. அவர் எதற்காக கோஹினூர் வைரத்தைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா, இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன், பிரமாண்டமாக, பழைய ‘ராஜா ராணி’ கதை பாணியில், வரலாற்றுப் புனைவாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் ‘ஹரி ஹர வீரமல்லு’.
கதை நாயகன் ஹரி ஹர வீரமல்லுவாக பவன் கல்யாண் நடித்திருக்கிறார். ஆந்திராவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் மாஸாக வருகிறார். சங்கித்துவத்தின் கோணத்தில் இந்துமதப் பெருமை பேசுவது, முகலாயர் ஆட்சிக்காலத்தை இழிவு செய்வது, அதன் காரத்தைக் குறைக்க இஸ்லாமியர்களுடன் நட்பு பாராட்டுவது போல் வருவது என முழுக்க முழுக்க வலதுசாரி அரசியல்வாதியாகவே பயணித்திருக்கிறார். கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ் உதவியுடன் அதிக சிரமமின்றி நடித்திருக்கிறார். ஆடியிருக்கிறார். அடித்திருக்கிறார். பறந்திருக்கிறார்.
நாயகி பஞ்சமியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு பெரிய வேலை இல்லை. முக்கியமாக, பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பாக பாபி தியோல் நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
நாயகனின் வளர்ப்புத் தந்தை சிவநந்தாவாக வரும் சத்யராஜ், வளர்ப்புத் தாய் கௌசல்யாவாக வரும் ஈஸ்வரிராவ், மற்றும் நாசர், ரகுபாபு, பூஜிதா பொன்னாடா, தலைவாசல் விஜய், சுனில், ரெடின் கிங்ஸ்லி, தணிகலபரணி, முரளி சர்மா, சுப்பராஜு, சச்சின் கெடேகர், அனசூயா பரத்வாஜ், கபீர் பெடி, கபீர் துஹான் சிங் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. ஔரங்கசீப்பின் உயரிய பிம்பத்தைச் சிதைக்கும் வண்ணம் வரலாற்றை கேவலமாகத் திரித்து, சங்பரிவாரத்தை குஷிப்படுத்துகிற விதமாய் கற்பனைச் சரக்குகளைச் சேர்த்து, பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இசையமைப்பாளர் கீரவாணியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. தாளம் போடும் வகையிலும், முணுமுணுக்கும் வகையிலும் பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையின் மூலம் படத்தின் மாஸ் காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளில் குறை இருந்தாலும், அதை மறைக்கும் விதத்தில் ஒளிப்பதிவாளர்களின் பணி அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், கலை இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரது பணிகளும் கவனம் ஈர்க்கின்றன.
‘ஹரி ஹர வீரமல்லு’ – சங்கிகளுக்கும் சங்பரிவார் ஆதரவாளர்களுக்கும் பிடிக்கும்! அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் கம்மி!
ரேட்டிங்: 1.25/5.