ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம்

நடிப்பு: யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெராடி, கல்கி, ‘விக்ரம்’ புகழ் வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் மற்றும் பலர்

இயக்கம்: வினீஷ் மில்லினியம்

கதை, திரைக்கதை, வசனம்: வினீஷ் மில்லினியம் & பிரகாஷ் கே

ஒளிப்பதிவு: மது அம்பாட் ஐஎஸ்சி

படத்தொகுப்பு: சாபு ஜோசப்

பாடலிசை: எஸ்.என்.அருணகிரி

பின்னணி இசை: ஜித்தின் கே ரோஷன்

தயாரிப்பு: ’வாமா எண்டர்டெயின்மெண்ட்’ ஜாகிர் அலி, ’ஸ்ரீசரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ்’ ஜி.சரவணா

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் (எஸ் 2 மீடியா)

காமெடி நடிகராக திரைவாழ்க்கையைத் தொடங்கி, குணச்சித்திர நடிகராக வளர்ந்து, கதையின் நாயகனாக உயர்ந்துவரும் இன்றைய நடிகர்களில் யோகி பாபுவும் ஒருவர். இவர் நாயகனாக நடித்த ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’, ‘கோலமாவு கோகிலா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் தொடர்ச்சியாக அவர் நாயகனாக நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

கதை நாயகனும், மேஜிக் கலைஞருமான யோகி பாபு, மலைப்பிரதேசமான நீலகிரியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது உதவியாளரான கல்கியும் இருக்கிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று மேஜிக் செய்து காட்டி அதில் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

யோகி பாபுவின் அப்பாவும் ஒரு மேஜிக் கலைஞராக இருந்தவர் தான். அவர் நெருப்பில் மிக அரிதான வித்தை ஒன்றை செய்தபோது, கெடுவாய்ப்பாக தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்துபோனார். சிறுவயதிலிருந்தே அப்பாவின் வித்தைகளைப் பார்த்து வளர்ந்த யோகி பாபு, மேஜிக் தொழிலை முழுவதுமாக கற்றுக்கொள்வதற்கு முன்பே அப்பா இறந்துவிட, தனக்குத் தெரிந்த அளவு மேஜிக் செய்து பிழைத்து வருகிறார். என்றாலும் அத்தொழிலில் பிரகாசிக்க இயலவில்லை. அப்பாவின் நினைவாக அவரது பாழடைந்த பங்களாவில் தனிமையில் வசித்து வரும் யோகி பாபுவை, அவரது வீட்டருகே இருக்கும் மூன்று இளைஞர்கள் சதா குடித்துவிட்டு கேலியும், கிண்டலும் செய்து வெறுப்பேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், ஓர் ஊரில் மேஜிக் செய்யும்போது கொஞ்சம் சொதப்பி குழந்தை ஒன்று பாதிக்கப்பட, யோகி பாபுவுக்கும், கல்கிக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுக்கிறார்கள். இது போதாதென்று போலீசாரும் யோகி பாபுவை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ’பெண்டை நிமிர்த்தி’ அனுப்புகிறார்கள். இதனால் மனம் நொந்துபோகும் யோகி பாபு, மேஜிக் தொழிலை தொடர்வதா, நிறுத்திக்கொள்வதா என்று குழம்பித் தவிக்கிறார்.

நாயகியும், மேஜிக் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவருமான சாந்தி ராவ், யோகி பாபுவின் மேஜிக்கைப் பார்த்து, பிடித்துப்போய் அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். தனது ஆராய்ச்சி சம்பந்தமாக, அடிக்கடி யோகி பாபுவைப் பார்க்க வரும் சாந்தி ராவை கிண்டல் செய்யும் மூன்று இளைஞர்களில் ஒருவரை அடித்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் ஆத்திரம் கொள்ளும் அந்த இளைஞர் ஒரு ரவுடியை வைத்து யோகி பாபுவின் ஒரு கையை வெட்டிவிட, மேஜிக் தொழில் செய்ய முடியாமல் போகிறது யோகி பாபுவுக்கு. அதே சமயம் யோகி பாபுவுக்கு நெருக்கமான ஒரு சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுகிறது.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் யோகி பாபு, தலைமறைவாக இருந்துகொண்டு – சட்டத்தின் பிடியில் சிக்காமல் – தனது மேஜிக் திறமையால் அந்த ரவுடியையும், மூன்று இளைஞர்களையும் எப்படி பழி தீர்த்தார் என்பதே ‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார். மேஜிக் கலைஞர் கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான காமெடியைக் குறைத்துக் கொண்டு அவர் சீரியஸாக நடித்திருப்பது ரசனைக்கு உரியதாக இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் நிறைவாக செய்திருக்கிறார்.

ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ் கே எழுத, வினீஷ் மில்லினியம் இயக்கியிருக்கிறார். யோகி பாபுவை வெறும் காமெடியனாக காட்டாமல், கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாக கையாளுவதில் இயக்குநர் வினீஷ் மில்லினியம் வெற்றி பெற்றுள்ளார். திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்திருந்தாலும், அதை கூர்மைப்படுத்த கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

தேசிய விருது பெற்ற மது அம்பாட்டின் ஒளிப்பதிவும், சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

‘ஜோரா கைய தட்டுங்க’ – யோகி பாபுவின் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!

ரேட்டிங்: 2.5/5.