”தோல்வி கண்ட தேஜஸ்வி யாதவுக்கு சொல்வதற்கு என்னிடம் ஒரே ஒரு செய்தி தான் இருக்கிறது…”
மரியாதைக்குரிய தேஜஸ்வி யாதவ்க்கு,
நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியின் 15 ஆண்டுகால காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உண்மையாக போராடினீர்கள். மக்களுடன் நின்றீர்கள். ஆனாலும் தோல்வியே கிட்டியது. அரசியலில் வெற்றி தோல்வியைத் தாண்டி தொடர்ந்து கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இங்கு முக்கியம்.
உங்களுக்கு சொல்வதற்கு என்னிடம் ஒரே ஒரு செய்திதான் இருக்கிறது…
இந்தியாவின் மோசமான காலகட்டமான ’மிசா’ குறித்து உங்கள் தந்தை மூலமாகவும், தந்தையின் அரசியல் ஆசிரியரான ஜெயப்பிரகாஷ் நாராயண் வரலாறு வாயிலாகவும் என்னைவிட அதிகம் அறிந்தவராக இருப்பீர்கள். எவ்வாறு பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், உங்கள் தந்தையும் பாதிக்கப்பட்டார்களோ, அதேபோல் எங்கள் மாநிலத்திலும் ஒரு இளைஞர் கடுமையாக தாக்கப்படுகிறார். மிசா காலம் முடிந்து அரை நூற்றாண்டு காலம் மக்களுடனும், கட்சியினரிடமும் தொடர்ந்து பணிசெய்து கொண்டே எம்எல்ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும், பார்ப்பனிய சக்திகளால் இலகுவாக “வாரிசு” என ஏளனமும், உதாசீனமும் செய்யப்பட்டவர். அதையெல்லாம் சிந்தையில் ஏற்றாமல் தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றினார்!
“உழைப்பு“ என்ற வார்த்தைக்க்கு அகராதியில் அர்த்தம் தேடினால் அவருடைய பெயரை யோசிக்காமல் எழுதலாம். அந்தளவிற்கு இரவு பகல் பாராது மக்களுடன் நின்றார்.
கட்சியும் ஆட்சியில் இல்லாத சூழலில் 2016ல் தேர்தல்… ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையான மக்கள் எழுச்சி. எதிர்கட்சியாக இருந்த கட்சி வெற்றி பெறலாம் என்ற சூழலில், அரசியல் சதுரங்கத்தால் ’மக்கள் நலக் கூட்டணி’ என்ற மொண்ணையான ஒன்று மக்களுக்கு வண்ணமயமாக காட்டப்பட்டது. வெறும் 2% வாக்குகளில் வெற்றியை இல்லாமல் செய்தனர். கட்சிக்கு அதிகாரமென்பது மேலும் ஐந்தாண்டுகள் தூரமாகியது என்ற கவலையை விட, 2011 தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தும் போய்விட்டது. இந்த சூழலில் தான் அரசியல் ஞானியான கட்சித் தலைவரும் வயதின் காரணமாக மறைகிறார். இனிமேல் அந்த கட்சியை ஒழித்து விடலாம் என பார்ப்பனியம் கொக்கரிக்கிறது…
கட்சிக்குத் தலைவராகிறார். கட்சியினரை உறசாகப்படுத்துகிறார். மக்களை சந்திக்கிறார். ஆட்சியின் அவலங்களை தொடர்த்து மக்கள் மன்றத்தில் பேசுகிறார்.
அவர் தேர்ந்த பேச்சாளர் இல்லை; அவர் நளினமான எழுத்தாளர் இல்லை; அவர் கவர்ச்சியான நடிகர் இல்லை; ஆனால் சித்தாந்த பிடிப்புடன் கூடிய நேர்த்தியான தலைமைத்துவம் கொண்ட உழைப்பின் வலிமை தெரிந்தவர்.
தோல்வியைக் கண்டு துவளாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார். கூட்டணியை மறு கட்டமைத்தார். கூட்டணி கட்சிகளுக்கு கூட்டணியின் மகத்துவத்தை எடுத்துரைத்து, அரவணைத்து வழிநடத்தினார். அடுத்த மூன்றாண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இன்று உங்களை வீழ்த்திய சக்திகளை ஒட்டுமொத்த இந்தியாவே ஆதரித்த போதும் தன் மாநிலத்தில் அடையாளமற்ற கட்சியாக மாற்றினார். கூட்டணியை முழுமையாக வெற்றி பெற செய்தார்.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அதே கூட்டணியை கட்டமைத்து, 2021, மே 7ந்தேதி “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என கூறி தமிழ்நாட்டின் 8-வது முதலமைச்சாராக பதவியேற்றார்.
அரியணையில் ஏறியபோதும், பதவியேற்ற நாள் முதல் கூட்டணி கட்சியினரை அரவணைத்து, அதே அணுகுமுறையுடன் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் பாசிசத்தை அலறவிட்டு துடைத்தெறிந்தார். தேர்தல் வெற்றி நாயகனாக இன்று பார்க்கப்படுகிறார். அதை தன் வெற்றியாக பாவிக்காமல் மக்களின் வெற்றியாக, கட்சியினரின் வெற்றியாக, கூட்டணி கட்சியினரின் உழைப்பாக பார்க்கிறார்.
ஆம் … என் சித்தாந்த தலைவன் மு.க.ஸ்டாலின் தான் இன்று உங்களுக்கான மாதிரி! அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், சரியான முற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு கொண்டு அரவணைத்து, மக்களுடன் தொடர்ந்து உரையாடி, வரக்கூடிய 2030 சட்டமன்ற தேர்தலில் பீகாரின் முதல் அமைச்சராக நீங்கள் பதவியேற்க வாழ்த்துகிறேன்!
–பிலால் அலியார்
15/11/2025
துபாய்-அமீரகம்
