”வாத்தியார் ஆசியில் ‘வா வாத்தியார்’ வெற்றிப்படமாக அமையும்!” – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

நடிகை ஷில்பா பேசியதாவது..,

வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம். சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார். அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன். கார்த்தி உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரை விட்டால் வேறு யாரும் இந்த ரோல் செய்ய முடியாது. அந்தளவு அசத்தியிருக்கிறார். கீர்த்தியை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். இந்த ப்ராஜெக்ட் அழகாக எடுத்துள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பேசியதாவது..,

இது எனக்கு ஸ்பெஷலான படம். என் அப்பா எம் ஜி ஆர் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவருடன் வேலை பார்க்க முடியாது. ஆனால் அது இந்தப்படத்தில் நிறைவேறியுள்ளது. படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளது, அதை சொல்ல முடியாது. நான் நிறைய தயாராகி வந்தால், கார்த்தி சார் அவர் அப்பாவிடம் நிறையக் கேட்டுவிட்டு வருவார். அவர் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்த்தது பெரும் மகிழ்ச்சி. ஞானவேல் ராஜா நிறைய உழைத்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன். நன்றி.

ஜி.எம்.சுந்தர் பேசியதாவது…

இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலை கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார்… உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் “காதலும் கடந்து போகும்” படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்கு நன்றி. சத்யராஜ் சார் என்னை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தார். அதற்காக அவருக்கு நன்றி. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.

பல்லவி சிங் பேசியதாவது..,

வா வாத்தியார் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். நலன் சாரிடம் வேலை பார்த்தது எப்படி இருந்தது என அனைவரும் கேட்டனர். அவர் என்னிடம் முழு சுதந்திரமாக, புதிதாக செய்யச் சொன்னார். முழுதாக புதுமையாகச் செய்ய வாய்ப்பு தந்தார். நலனின் விஷனுக்கு உருவம் தந்துள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம், சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரி தான், கார்த்தி சார் இந்தக்கதையை ஒத்துக்கொண்டதற்கு அவர் தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம் ஜி ஆருடன் அதிகம் பழகியது அவர் தான். அதற்காக அவருக்கு நன்றி. நலனிடம் இந்தப்படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன், அதை இந்த தேர்தலில் செய்துள்ளார். எனக்கு ஸ்பெஷல் கேரக்டர், அதைப்பற்றிச் சொல்ல மாட்டேன், ஆனால் அவர் சொன்ன அளவுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன். சத்யராஜ் சார் எம் ஜி ஆர் தந்த கர்லாக்கட்டையைத் தந்து படத்தில் இதை பயன்படுத்தி நடித்து விட்டுத் திரும்ப கொடுத்திவிடணும் என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை. எம் ஜி ஆரின் தீரம் அப்போது தான் புரிந்தது. கார்த்தி அருமையான நடிகர், அவருடன் தான் எனக்கு நிறையக் காட்சிகள், அவர் எனக்கு அண்ணன் குழந்தை போலத் தான், சூர்யா, ஜோதிகா எல்லோரும் அப்படித்தான். உங்களுக்குப் பிடித்த மாதிரி நலன் இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,

இங்கே நிறையப் புரட்சித் தலைவர் ரசிகர்கள் வந்திருப்பீர்கள். எங்க வீட்டுப் பிள்ளை கார்த்தி இப்படத்தில் எம் ஜி ஆராக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் தீவிர வாத்தியார் ரசிகர் ஆனால் நான் வில்லன். ஆனால் ஆனந்த்ராஜ் ரசிகராக நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆர் டயலாக் எல்லாம் சொன்னால் அவரால் என்ன படம் என சொல்ல முடியாது.

(தொடர்ந்து எம் ஜி ஆர் பட வசனங்களை விடாமல் பேசி ஆனந்த்ராஜிடம் படப்பெயர் சொல்லச் சொல்லி அவருடன் நகைச்சுசையாக விளையாடினார். மேலும் அவர் பேசுகையில்..),

நான் எம் ஜி ஆரின் அரக்கத்தனமான ரசிகன். எப்போதும் ஒரே புரட்சித் தலைவர் தான். அவர் ரோலில் எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. வேறு யாராவது நடித்திருந்தால் வயிறு புகைச்சலாகியிருக்கும். ஆனால் கார்த்தி நடித்தது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது..,

என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான அழகான தருணம் நலன், ஶ்ரீனிவாஸ் கவினை சந்தித்தது தான். அவர் படம் வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படம் அறிவித்தபோது போன் செய்து, கெஞ்சி, நான் செய்கிறேன் என வாய்ப்பு வாங்கினேன். நிஜ வாழ்வு சூப்பர்ஹீரோ என எம் ஜி ஆரை சொல்லலாம். அவர் வாழ்க்கையை, அவர் ஆளுமையை திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நிறைய உழைத்து இசையைத் தந்துள்ளோம். சத்யராஜ் சார் படத்தில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக்கதை கேட்டபோது, கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புது திறப்பாக இருக்குமெனத் தோன்றியது. இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரஞ்சித், நலன், கார்த்திக் சுப்புராஜ், என இவர்கள் எல்லாம் சினிமாவுக்குள் வரக்காரணமாக இருந்த ஞானவேல் சாருக்கு நன்றி. இந்தப்படம் பிடித்திருந்தால் எல்லோரிடமும் சொல்லுங்கள். நன்றி.

திங்க் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,

வா வாத்தியார் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்திலேயே இப்படத்தில் இணைந்து விட்டோம், பாடல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. நலனின் சூது கவ்வும் படத்தில் இணைந்திருந்தோம், அது பிளாக்பஸ்டர் ஆல்பம். அது போல இந்தப்படப் பாடல்களும் வெற்றி பெறும். இப்படம் கொஞ்சம் பார்த்தேன், படம் அருமையாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது..,

திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள் ஆனால் எனக்கு அது கார்த்தி சார் தான். என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில், கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன். எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார் கார்த்தி சார். அவர் படங்களில் சின்ன சின்ன விசயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார். அவர் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும்போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும். ஞானவேலின் அப்பா தீவிர எம் ஜி ஆரின் ரசிகர். அவர் எடுத்திருக்கும் படம். அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது. சூர்யா சார் கூப்பிட்டு இதைச் செய்து, உன் பிரச்சனையை தீர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார். வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை. வா வாத்தியார் படம் மூலம் ஞானவேல் சாருக்கு எல்லாம் மாறும். நலன் இரண்டு படம் செய்துள்ளார். இரண்டுமே கல்ட் படம். வா வாத்தியார் ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள். வா வாத்தியார் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்குமென நம்புகிறேன். நன்றி.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

எல்லோருக்கும் வணக்கம். தமிழில் பேச முயற்சிக்கிறேன். இந்தப்படத்தில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சி. நலன் சாருக்கும், ஞானவேல் சாருக்கும் நன்றி. இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போது டபுள் ஷிப்ட்டில் நடித்துக்கொண்டிருந்தேன், ஒரு நாள் செட்டில் தூங்கி விட்டேன். ஆனால் எனக்காகச் சத்தம் போடாமல் லைட் செய்தார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. நலன் சார் உடன் வேலை பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும்போது சின்ன சின்ன விசயங்களையும் கவனித்துப் பாராட்டினார். சத்யராஜ் சார் ரசிகை நான். ஆனால் அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை. அது வருத்தம் தான். என் குடும்பத்தில் பலர் சிவக்குமார் சார் ரசிகர்கள் தான். எனக்குத் தமிழ் ரசிகர்கள் தரும் அன்பு பெரிய மகிழ்ச்சி தருகிறது. கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை நான். அவரை ஷீட்டிங்கில் தொந்தரவு செய்துகொண்டே இருந்தேன். அவருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,

எல்லோருக்கும் வணக்கம். இந்தப்படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்த படம். சில படங்கள் ஈஸியாக கதை சொல்லிவிடலாம் ஆனால் இது கதை சொல்லவே கஷ்டப்பட வேண்டும். நலன் அதை அழகாக எடுத்துள்ளார். அவரது முதல் இரண்டு படங்களில் விநியோகத்தில் இணைந்திருந்தோம். இப்போது மூன்றாவது படத்தைத் தயாரித்திருக்கிறோம். கார்த்தி சார் மெய்யழகன் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம் எனப் பலர் சொன்னார்கள் ஆனால் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அதே போல் இந்தப்படத்திலும் அட்டகாசமாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். கார்த்தி ரசிகர்களுக்கும் அவர்கள் ரசிக்கும் படமாக இருக்கும். வாத்தியார் ஆசி இப்படத்திற்கு உள்ளது, அவரது ஆசியில் இப்படம் வெற்றிப்படமாக அமையுமென நம்புகிறேன் நன்றி.