உருட்டு உருட்டு – விமர்சனம்

நடிப்பு: கஜேஷ் நாகேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன்ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர் மற்றும் பலர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பாஸ்கர் சதாசிவம்
ஒளிப்பதிவு: யுவராஜ் பால்ராஜ்
படத்தொகுப்பு: திருச்செல்வம்
பாடலிசை: அருணகிரி
பின்னணி இசை: கார்த்திக் கிருஷ்ணன்
தயாரிப்பு: ’ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்’ பத்மராஜு ஜெய்சங்கர்
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்
ஒரு சிறிய நகரத்தில் பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார் தர்மராஜ் (தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர்). அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள தில்லுமுல்லுகளில் கை தேர்ந்தவர். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அல்லது அடியாட்களை அனுப்பி மிரட்டி, மோசடியாக டபுள் டாக்குமெண்ட் போட்டு, பிறரது நிலங்களை அபகரித்து விற்று பணம் பார்ப்பதில் அவர் கில்லாடி. அதனால் அவருக்கு ‘டபுள் டாக்குமெண்ட்’ தர்மராஜ் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
தர்மராஜின் ஒரே மகள் நாயகி ஷர்மி (ரித்விகா ஸ்ரேயா). கல்லூரி மாணவி. காதலுடன் அவரை வளைத்துப் போட நினைக்கும் குமரன் முதல் கிழவன் வரையிலான அனைத்து ஆண்களையும், தன் தோழிகள் சகிதம் டூ வீலர்களில் சென்று சந்தித்து, நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேலியும் கிண்டலும் செய்து, கலாய்த்து, விரட்டியடித்து விடுவது அவரது இயல்பு. அப்படிப்பட்ட ஷர்மி, அந்த ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு, எந்நேரமும் மதுவும், மயக்கமாகவும் திரியும் இளைஞரான நாயகன் சந்துருவை (கஜேஷ் நாகேஷ்) சூழ்நிலை காரணமாக காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.
சந்துருவோடு படுக்கையைப் பகிர்ந்து பாலியல் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஷர்மி. இதற்காக, படிப்பு சம்பந்தமான இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு வெளியூர் செல்வதாக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு, யாருக்கும் தெரியாமல் சந்துருவை அழைத்துக்கொண்டு மேட்டூர் செல்கிறார். அங்கு அவரது தாய்மாமனும், சித்த வைத்தியருமான முனுசாமி (மொட்டை ராஜேந்திரன்) மூன்று பெண்டாட்டிகள் (அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி) சகிதம், ‘மூணு பொண்டாட்டி முனுசாமி’ என்ற பெயருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டில் சந்துருவுடன் தங்குகிறார் ஷர்மி.

சந்துருவை ஷர்மி மொட்டை மாடியில் தனிமையில் சந்தித்து ஆசையுடன் ரொமான்ஸ் செய்ய முயலுகிறார். படுக்கையறைக்கு சந்துருவை வரவழைத்து, படுக்கையைப் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால் சந்துருவோ எந்நேரமும் பாட்டிலும் கையுமாக மது அருந்தியபடி தான் இருக்கிறாரே தவிர, ஷர்மி விரும்புகிற மாதிரி காம உணர்ச்சியோடும் கிளர்ச்சியோடும் இல்லவே இல்லை.
சந்துருவைத் திருத்தி குடிப்பழக்கத்திலிருந்து மீட்டுவிட்டால், அவருக்கு தன் மீது மோகம் வந்துவிடும் என்று கருதும் ஷர்மி, சந்துருவை மீட்க பல்வேறு வழிகளில் முயலுகிறார். அதற்கு பலனில்லாதபோது, தீவிர யோசனைக்குப் பிறகு, யாரும் செய்யத் துணியாத விபரீதச் செயல் புரிந்து பார்வையாளர்களைத் திடுக்கிட வைக்கிறார். அது என்ன? அதன்பிறகு என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘உருட்டு உருட்டு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.
கதையின் நாயகன் சந்துருவாக கஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல சிறப்பாக நடித்திருக்கிறார். மாதுவை விட மது தான் முக்கியம் என்ற நினைப்பில் சதா குடிபோதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு அதற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நாயகியாக, கல்லூரி மாணவி ஷர்மியாக ரித்விகா ஸ்ரேயா நடித்திருக்கிறார். காதலிக்கும்போதே காமசுகம் அனுபவிக்கத் துடிக்கும் இக்கால இளம்பெண்கள் சிலரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பதோடு, கிளைமாக்ஸில் கண்ணகி போல் ஆவேசமடைந்து அவர் செய்யும் காரியத்தால் பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். அவரது அப்பாவாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டபுள்டாக்குமெண்ட் தர்மராஜாக வரும் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர், ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி பார்வையாளர்களை திசை திருப்ப பயன்பட்டிருக்கிறார்.
சித்த வைத்தியராக, மூணுபொண்டாட்டி முனுசாமியாக வரும் மொட்டை ராஜேந்திரன் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்து, வசனம் பேசி, பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். அவரது மூன்று பெண்டாட்டிகளாக வரும் அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர், காமரசம் சொட்டச் சொட்ட நடித்திருக்கிறார்கள்.
பாவா லட்சுமணன், சேரன்ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சதாசிவம், தற்கால இளைஞர்களை சீரழித்து அவர்களது தாம்பத்திய வாழ்க்கையைப் பாழாக்கும் மதுவின் தீமையை சித்தரித்திருக்கும் இயக்குநர், குடியடிமைகளுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் கிளைமாக்ஸை அமைத்திருக்கிறார். கிளாமர் ஐட்டங்களைக் குறைத்து சீராக திரைக்கதையை படைத்திருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
அருணகிரியின் பாடலிசை, கார்த்திக் கிருஷ்ணனின் பின்னணி இசை, யுவராஜ் பால்ராஜின் ஒளிப்பதிவு, திருச்செல்வத்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளன.
‘உருட்டு உருட்டு’: மதுவுக்கு எதிராக பாடம் கற்பிக்கும் படம்; ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 2.8/5.