“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கத்திற்கு வாருங்கள்; கண்டிப்பாக ‘ரெட்ரோ’ உங்களுக்கு பிடிக்கும்!” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் கஜராஜ் பேசுகையில், ” சிவக்குமார் , நாசர் ஆகிய இருவரும் லெஜெண்ட்ஸ். நான் நடிகனாக நடித்த முதல் படத்திற்கு வாய்ப்பளித்த என் மகனும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் ‘பீட்சா’. நூறாவது படம் ‘ரெட்ரோ’. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தது தான் எனக்கு ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அனைவர் மீதும் அக்கறையும், அரவணைப்பும் கொண்டவர் சூர்யா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. கேங்ஸ்டர் படங்களை இயக்க வேண்டும் என்று வரவில்லை. கிரே ஷேடு உள்ள கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவது எனக்கு பிடிக்கும். என்னுடைய முதல் படமான பீட்சா படத்திலிருந்து ஹீரோ கேரக்டர் கிரே ஷேடு உள்ளதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

‘இறைவி’ திரைப்படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தை ஏன் ஒரு ஆணிடம் ஒப்படைக்கிறார் என்ற கேள்வி என்னுடைய சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டில் மனைவி கூட ஏன் எப்போதும் வன்முறையான படங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறாய்… எடுத்துக் கொண்டே இருக்கிறாய்…. ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க மாட்டாயா..? எனக் கேட்பார்.

‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்திற்கு முன் எழுதினேன். நான் கதையை பற்றி முழுமையாக சொல்ல விரும்பவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தில் நானூறு பேர்களுக்கு மேல் பணியாற்றுவோம். திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மேஜிக் செய்திருப்போம். அந்த அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக தர வேண்டும் என்பதற்காகத்தான் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்வதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கத்திற்கு வாருங்கள். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும்.

நான் எழுதும் எழுத்துகளுக்கு ஒரு ஆன்மா இருக்கும் என்று உறுதியாக நம்புபவன்.‌ கதைகள் நாம் சந்திக்கும் நபர்களிடமிருந்து கிடைக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தை பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதை புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இணைந்தோம். இந்த திரைப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.