விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம்!” – பிரி ரிலீஸ் ஈவண்டில் இயக்குநர் அருண் பிரபு

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,
பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,
விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார், உடனே நான் வந்து விட்டேன். முதன் முதலாக சுக்ரன் படத்தில் என்னுடைய கணவர் தான் இவரை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்போது வேறு பெயரை வைத்துக் கொண்டு வந்தார். என்னுடைய கணவர் தான் விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்தார். என் கணவர் ராசியானவர் என்று எல்லோருக்கும் தெரியும். இவரும் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இன்று வரை ராசியாக தானே இருக்கிறார், இவருக்கு என்ன குறைச்சல்? 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி இன்றுவரை 24 படங்கள் முடித்து இது 25வது பட விழாவில் இருக்கிறோம். இசை அமைத்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று நடிக்கும் ஆசை வந்தது. அவர் ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருடைய முதல் படத்தை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பார்த்தேன். அவருடைய ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். ஏற்கனவே அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இருப்பினும் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும், இந்த விஜய் சார் பற்றி கூறிவிட்டீர்கள். அந்த விஜய் சார் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விக்கு ரொம்ப நன்றாக இருக்கிறார் என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,
விஜய் ஆண்டனியின் 25 படங்களில் நான் 7 படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் பல படங்களில் பயணிப்போம்.
சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ், விஜய் சார் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நிறுவனம் என்று கூறினார். அதுபோல, அவருடைய அப்பா எஸ் சி சந்திரசேகர் சார் அறிமுகப்படுத்திய விஜய் ஆண்டனி சாரும் ஒரு நிறுவனம் தான். இவர் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் சினிமாத்துறை என்பது மிகவும் சவாலாகவும் பிரச்சினையாகவும் இருக்கும் போது அடுத்தடுத்து படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அனைத்து படங்களும் வெற்றி அடைந்து கொண்டும் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். அதேபோல் இவர் சோர்வடையாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார். நாங்கள் சிங்கப்பூர் செல்லும்போது விமானத்தில் நான் தூங்கி விட்டேன். ஆனால், அவர் தூங்காமல் அடுத்தடுத்த பட வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார். அப்துல் கலாம் ஐயா கூறியது போல அவருடைய கனவு அவரை தூங்க விடாமல் செய்கிறது. அவருடைய கனவுகள் 2026 ஆம் ஆண்டு வெற்றிபெறும், அது பற்றி பிறகு பேசுவோம்.
சினிமாவில் பல புதுமைகளை கொடுக்க வேண்டும் என்று கனவுகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறார். இன்று காலை திட்டமிட்டது போல் நூறு சாமி படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். பிச்சைக்காரன் மற்றும் மார்கன் படம் எப்படி பெரிய அளவில் வெற்றி பெற்றது அதேபோல இந்த படத்தையும் அவருக்கு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதோடு இன்னும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார். நான் மட்டும்தான் அவரை கொஞ்சம் மெதுவாக இயங்குங்கள் என்று கூறினேன். அவர் எதற்கும் பயப்படவே மாட்டார். நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை ஆய்வு செய்யும்போது பயம் வரும். ஆகையால், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளாதீர்கள் என்று கூறுவார்.
ஓடிடி-யில் ஜெண்டில் உமன் படம் பார்க்கிறார், உடனே ஜோஷ்வாவை அழைத்து கதை கூறுங்கள் என்று கேட்கிறார். உடனே லாயர் என்று செய்து வெளியிட்டு விட்டார். நான் அப்போதுதான் ஜோஸ்வாவிடம் அடுத்து என்ன படம் என்று கேட்டபோது, அடுத்த படத்தை விஜய் ஆண்டனி சார் உறுதி செய்து விட்டார் என்றார். இந்த அளவிற்கு வேகமாக செயல்படுகிறார் இன்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மார்கன் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. காலையில் எழுந்ததுமே இந்த படத்தை, சென்ற படத்தை விட வியாபார ரீதியாக வெற்றி பெற வைப்பது எப்படி? என்று தான் கேட்பார். நான் கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்பேன். ஆனால், அக்டோபர் மாதம் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய வேகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் மூலமாக பல தயாரிப்பாளர்கள் உருவாக வேண்டும். அதன் மூலம் பலரும் பயனடைய வேண்டும். இந்த சினிமாத் துறையும் மிகவும் வளர்ச்சி அடைய வேண்டும். சக்தி திருமகன் 25வது படம், இது ஒரு துவக்கம்தான். 50-வது படத்திலும் இது போல் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.
அதேபோல் அருண் பிரபுவை விஜய் ஆண்டனி போல் ஆராதிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அருண் பிரபு சார் ஏன் வரவில்லை என்று கேட்டால் அவருக்கு வேலைகள் நிறைய இருக்கிறது என்று சென்ற இடமெல்லாம் பாராட்டிக் கொண்டே இருந்தார். ஒரு இயக்குனர் வரவில்லை என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு அவரைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டே இருந்தார். நான் கூட இது போல இயக்குனர்களை பாராட்டி பேசியது இல்லையே என்று யோசித்தேன்.
இந்தியாவிலேயே ஒரு உச்ச இயக்குனர் மற்றும் தமிழ் சினிமாவில் ஐந்து சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்று பெயர் எடுக்கும் அளவிற்கு இந்த படத்தை கொடுத்திருக்கிறார் அருண் பிரபு.
இந்த படத்தில் நடித்த நாயகி மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் / தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில்,
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகை தனத அனைவருக்கும் நன்றி. இப்போது தான் 25 படங்கள் நடித்தது போல் இல்லை, நேற்று தான் “நான்” படத்தில் நடித்தது போல் உள்ளது.
25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம்.
அருண் அவர்களின் இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரியாமலே எனக்கு பிடித்த படம் “அருவி” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யும் போது நான் நம்பவே இல்லை. அவர் கதை சொல்லும் பொது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களை தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது.
பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி.
இப்படத்தை என் சில நண்பர்களுக்கு காட்டினேன், அவர்களிடம் இவர் மறைமுகமாக ஏதேனும் குறியீடு வைத்திருக்கிறாரா? என்று கேட்டேன். அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கிறார் என்றார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், எப்படி இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்தில் தானே உள்ளது என்றேன். அந்த அளவிற்கு அழுத்தமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு.
பிரபு மற்றும் ஷெல்லியின் காம்பினேஷன் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேடுகொள்கிறேன்.
நூறு சாமி படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும். அப்படம் பிச்சைக்காரன் படத்தை விட பெரிய ஹிட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் – ஆக இருந்த இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளது.
அனைவரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சக்தித் திருமகன் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி என்றார்.
இயக்குனர் அருண் பிரபு பேசுகையில்,
இங்கு பேசிய அனைவரும் பெரிய வார்த்தைகள் கூறினார்கள், அவர்களுக்கு நன்றி. இப்படத்தை 19ம் தேதி திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
இது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம். நீங்கள் எந்த மாறியான எதிர்பார்ப்பில் வந்தாலும், இப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
விஜய் ஆண்டனி சார் நடித்த மற்ற படங்களை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மாறுபட்டு இருக்கும்.
நடிகர் அஜய் தீஷன் பேசுகையில்,
சிறு வயதிலிருந்து விஜய் ஆண்டனி சாரை பார்த்து வளரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அப்படி இருக்க, அவரின் 25 வது படத்தின் மேடையில் நான் நிற்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. பொதுவாக நான் விஜய் ஆண்டனி சார் நடிக்கும் படங்களை பார்த்துவிடுவேன். அதே போல் சக்தித் திருமகன் படத்தை பார்த்துவிட்டு, “என்ன சார் பண்ணிருக்கீங்க” என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் என்னை பார்தார், நான் நன்றாக உள்ளது என்கிறேனா? இல்லையா? என்று அவருக்கு புரியவில்லை.
விஜய் ஆண்டனி மிகவும் சாதுவான ஒருவர், அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பவே முடியவில்லை.
அருண் பிரபு சாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அருவி படத்தை நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன், வாழ் படத்தை சென்ற வருடம் பார்த்தேன். இரண்டு படங்களும் என்னை ஏதோ செய்துவிட்டது. அவர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்சியாக உள்ளது.
விஜய் ஆண்டனி சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் இந்த துறைக்கு புதிது, 5 வருடங்களாக தான் திரைத்துறையில் இருக்கிறேன். சாருடன் இணைந்து பணியாற்றி, உதவி இயக்குனராக பணிபுரிந்து, இப்போது நடிகராகியுள்ளேன்.
ஆனால், இந்த துறையில் பலரால் சாதிக்க முடியாமலும், இயக்கிய படங்களை வெளியிட முடியாமலும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாமலும் தவிக்கும் கஷ்டத்தை சமீபமாக தான் புரிந்துக் கொண்டேன். ஆனால், அதை தனது 25 படங்களுக்கும் சரியாக செய்து வரும் விஜய் ஆண்டனி அவர்களை பார்கும் போது பிரம்மிப்பாக உள்ளது.
அவர் ஒரு படத்தை பொருளாக பார்க்காமல், குழந்தையாக பார்ப்பார், அதை சுமக்கும் இயக்குனரை தாயாக பார்ப்பார். அப்படிபட்ட ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பல படங்களில் நான் பணியாற்ற வேண்டுமென விரும்புகிறேன்.
சக்தித் திருமகன் சிறப்பாக வந்துள்ளது, இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும், நன்றி என்றார்.
கதாநாயகி திருப்தி பேசுகையில்,
நான் சென்னை வரும்போது ஒரு வீடு போன்ற உணர்வு கிடைக்கும் இப்போதும் அப்படி தான். சக்தித் திருமகன் என்னுடைய முதல் படம், என்னை நம்பிய விஜய் ஆண்டனி சார் மற்றும் அருண் பிரபு சாருக்கு நன்றி. மருது பாடல் சிறப்பாக வந்துள்ளது, இனி வரும் காலங்களில் மருது பாடல் தான் என்னுடைய ரிங்டோன். இன்னும் பல படங்களில் நடிக்க வாய்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.
நடிகை ரியா பேசுகையில்,
இப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று வேண்டுகிறேன் என்றார்.
நடிகை ரினி பேசுகையில்,
நான் இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் நடித்துள்ளேன். தனது 25 வது படத்தில் நடிக்க வாய்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அருண் சாரின் அருவி படம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க செய்தது. அவரின் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இயக்குனர் சசி பேசுகையில்,
சக்தித் திருமகன் படத்தின் மூன்று ட்ரெய்லரில் ஒன்றரை நிமிடம் கழித்து தான் ஹீரோ விஜய் ஆண்டனி வருகிறார். அந்த துணிச்சல் யாருக்கும் எளிதில் வந்துவிடாது, அதுவே இப்படம் வழக்கமான ஒரு பொலிட்டிகள் திரில்லர் படம் இல்லை என்பதை உணர்த்துகிறது.
இப்படத்தின் ட்ரெய்லரை என் மனைவி உடன் பார்த்தேன், அவரின் ரியாக்ஷனை கவனித்தேன் பின்னர் அவர் ட்ரெய்லர் முடிந்தபின் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். நான் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர் யார் இயக்குனர் என்றார்? நான் அருவி, வாழ் படத்தின் இயக்குனர் அருண் என்றேன். அவர் “அதான்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அங்கு தான் உங்களின் வெற்றி உள்ளது. நீங்கள் நிச்சயம் சாதரண இயக்குனர் இல்லை. நான் இப்படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறேன். ட்ரெய்லரில் கிடைத்த அதே உணர்வு படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன். இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குனர் சுசீந்திரன் பேசுகையில்,
தனஞ்செயன் சார் சொன்னது போல் அனைத்து வேலையையும் எடுத்து செய்பவர் விஜய் ஆண்டனி, நிறைய புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரும் அவரை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். நல்ல கதை இருந்தால் விஜய் ஆண்டனியின் அலுவலகம் எப்போதும் திறந்து இருக்கும். அவருக்கு எல்லா வகையான வெற்றியும் கிடைக்க வேண்டுமென நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி என்றார்.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் பேசுகையில்,
விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நான் 15 ஆண்டுகளுக்கு முன் உத்தம புத்திரன் படத்தில் பணியாற்றியுளேன். அப்போது எப்படி இருந்தாரோ அதே போல் தான் அவர் இப்பொழுதும் இருக்கிறார், சினிமாவில் அப்படி இருப்பது மிகவும் கடினமான ஒன்று.
அவரின் 25 படங்களும் மிகவும் தனித்துவமாக இருக்கும். கதை படத்தின் டைடில் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். தமிழ் சினிமாவில் இருக்கும் பல முக்கியமான படங்களை கொண்டாடக் கூடியவர் விஜய் ஆண்டனி அதனால் தான் அவரின் படங்களும் கொண்டாடும் வகையில் அமைந்து வருகிறது. 25 படங்கள் என்பது மிகவும் கம்மி, நீங்கள் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், வாழ்த்துக்கள் என்றார்.
பாடகர் வாகீசன் பேசுகையில்,
நான் இப்படத்தின் பாடலை ரெக்கார்ட் செய்யும் போது, என் அண்ணனுடன் என்ன உணர்வு கிடைத்ததோ, அதே மாதிரியான உணர்வு தான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்தும் கிடைத்தது. நான் சரியாக பாடினாலோ, அதில் பிழை இருந்தாலோ அது அவரின் முகத்தில் தெரியாது. ஆனால், எது தேவையோ அதை எடுத்துக் கொள்வார். எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்ததற்கு விஜய் ஆண்டனி அண்ணாவுக்கு மிக்க நன்றி என்றார்.
இயக்குனர் பிரதீப் பேசும்போது,
முதல் படத்தில் இருந்தே விஜய் ஆண்டனி சாரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த படமும் பிளாக் பஸ்டர் தான். அவரிடம் ஏன் நீங்கள் தூங்கவே மாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டேன். தயாரிப்பாளராக இருந்து பார் என்று கூறினார்.
இயக்குனர் ஆனந்த் பேசும்போது,
எனக்கு பிடித்த துறையில் இயக்குனராக உருவாகி இருப்பதற்கு காரணம் விஜய் ஆண்டனி சார் தான். அவர் எப்போதுமே தெரியாது என்று தான் கூறுவார். ஆனால், எல்லா விஷயத்தையும் மிகுந்த நம்பிக்கையாக செய்வார். அவரை இயக்கிய இயக்குனர்கள் இந்த மேடையில் குறைவாகவே வந்திருக்கிறார்கள். பலரால் வர இயலவில்லை, 50வது படத்திற்கும் நாங்கள் அனைவரும் வருவோம் என்றார்.
இயக்குனர் ஆண்ட்ரோ பேசும்போது,
விஜய் ஆண்டனியின் கல்லூரியின் வகுப்பு தோழன் நான். பிச்சைக்காரன் படத்தின் சமயத்தில் விபத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த அவருடைய சக்தியை கண்டு வியந்தேன். 4 நாட்கள் கோமாவில் இருந்து மருத்துவர் பைக் ஓட்டக் கூடாது என்று கூறியும், தன்னம்பிக்கையோடு பைக் ஓட்டினார். அதன் பிறகு சுக்ரன் படத்திற்காக இசையமைத்தார். அதன்பிறகு நடித்தார், இயக்கினார் அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் ராஜா என்றார்.
இயக்குனர் அனந்த கிருஷ்ணன் பேசும்போது,
படத்தைப் பற்றி அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறும்போதும், சென்சார் பிரச்னை என்று ஒருசில பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மிகவும் தோய்ந்து போயிருந்தேன். அப்போது, விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து ஒரு போன் வந்தது. படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். சாருடைய இடத்தில் இருந்து எந்த பெரிய நடிகர்களும் ஒரு படத்தைப் பார்த்து இயக்குனரை அழைத்துப் பாராட்டுவார்களோ என்று தெரியாது. ஆனால், அன்று முதல் இன்று வரை அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார். கொரானா காலத்தில் கோடியில் ஒருவன் படத்தின் சமயத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல், இருப்பினும் விரைவாக படத்தை முடித்து அது வெற்றிப் பெறுவதற்கான அனைத்தையும் செய்தார்.
இயக்குனர் ஜோஷ்வா பேசும்போது,
என்னுடைய அப்பாவுடன் நான் பார்த்த கடைசி படம் சுக்ரன். 25 படங்கள் நடித்தும் இதுவரை ரசிகர் மன்றமே இல்லாத ஒரு நடிகர் என்றால் அவர் விஜய் ஆண்டனி சார் தான்.
இயக்குனர் விநாயக் பேசும்போது,
என்னுடைய ரோமியோவைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது, லவ் யூ சார். மனிதர்களை மனிதர்களாகவே நடத்துவது விஜய் ஆண்டனி சார். ஒரு மனிதனாக இருப்பது எப்படி என்று சாரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். அவர் என்னுடைய கதாநாயகன். அருண் படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். அருவி படம் போல சக்தி திருமகன் படத்திலும் நிச்சயம் ஏதாவது சொல்வீர்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அருண், விஜய் ஆண்டனி சார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பெப்பின் பேசும்போது,
டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அருவி படத்தை சென்னையில் உள்ள பல திரையரங்கிலும் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்த படம். அதேபோல், சக்தி திருமகன் படத்தையும் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் பார்ப்பேன் என்றார்.
எழுத்தாளர் பருதி பேசும்போது,
சாருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த பிறகு, அவர் மாபெரும் அப்பாவி என்பதை உணர்ந்தேன். வெளியே பார்க்கும் போது தெரியாது, நெருங்கி பழகும் போது, சிறு சிறு விஷயங்களுக்கும் ஆச்சரியமடைவார். உதாரணத்திற்கு, பூக்கி பட பூஜையில் தேங்காய்க்குள் படத்தின் பெயரை எழுதி போட்டு உடைத்தோம். அதைப் பார்த்து ஏம்பா தேங்காய்க்குள் இருந்து ஏதோ விழுகிறது என்று கூறினார். பின்பு அதை எடுத்து இது தான் பூக்கி என்று அனைவரிடமும் காட்டினார். அப்போது நீங்கள் தான் பூக்கி என்று கூற வேண்டும் போல இருந்தது. மேலும், நான் மேஜை மீது காலை தூக்கி மேலே வைத்திருக்கும் போது கூட பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்.
பூக்கி பூஜையின் போது 10 நிமிடம் நேரம் இருந்தது, அந்த நேரத்தில் கதையை கூறுங்கள் என்று கேட்டார். எப்போதும் வேலை செய்துக் கொண்டேயிருப்பார். இந்த விழாவிற்கு வரும்போது கூட ஒரு கதையை கொடுத்துவிட்டு தான் வந்தேன். வேலை செய்வது அவருக்கு போதையான விஷயம், அனைவருக்கும் அந்த போதையை ஏற்றி விடுவார். அவரிடம் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்றார்.
அருணை அருவி படத்தின் பிரிமியர் காட்சியில் தான் முதன்முதலாக சந்தித்தேன். மிகவும் அற்புதமான அரசியல் படத்தை கொடுத்திருக்கிறீர்கள் அருண். சாருடைய பின்னணி இசையை கேட்டிருக்கிறேன், தெறிக்க விடும்படியாக இருந்தது என்றார்.
நடிகர் செல் முருகன் பேசும்போது,
விஜய் ஆண்டனி சாரின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், அவருக்கு நன்றி. அவருடைய கடின உழைப்பு பற்றி தனஞ்செயன் சார் கூறினார். இந்த படத்தில் அதை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் எப்போதும் லேப்டாப் வைத்திருப்பார். கிளௌடில் வேலை செய்கிறோம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அது புரியாது. இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே மார்கன் படம் வெளியாகிவிட்டது. இப்போது லாயர் படமும் முடிந்துவிட்டது. அடுத்து நூறு சாமி படத்தையும் அறிவித்துவிட்டார்கள். அடுத்த படமும் தயாராகிவிட்டது. அவர் வேலை செய்வதைப் பார்க்கும்போது நமக்கு குற்ற உணர்வாக இருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு அடுத்து அதிகமாக கணிணியை உபயோகிப்பது விஜய் ஆண்டனி சார் தான். இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரம் என்று கூறினார்.
ஷெல்லி சாரின் ஒளிப்பதிவைப் பற்றி அனைவரும் பேசுவார்கள். ஷெல்லி சாருக்கும் அருண் சாருக்கும் இருக்கும் பிணைப்பைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். இருவரும் மொழிகள் இல்லாமல் பார்வையாலேயே விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றார்.
நடிகை ராதா பேசுகையில்,
அனைவருக்கும் வணக்கம், பத்திரிகையாளர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. இந்த சினிமா துறையும் இல்லை. இந்த விழாவின் நாயகன் விஜய் ஆண்டனி சார், “சக்தித் திருமகன்” என்ற டைட்டிலுக்கு பொருத்தமான ஒருவர் இவர். ஊரில் இருந்து சென்னைக்கு வந்து, இசையமைபாளராக இருந்து, நடிகராக மாறி தற்போது தயாரிப்பாளர்க இருப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இதில் பலரின் வாழ்க்கை அடங்கியுள்ளது. பலரின் வாழ்கையில் நீங்கள் ஒளியேற்றி வைத்துள்ளீர்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முன்பெல்லாம், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் படங்களை தான் விரும்பி பார்போம், அவர்களின் படங்கள் அனைத்துக் சிறப்பாக இருக்கும். அதே போல் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் நிறுவனமும் இப்போது படங்களை தயாரித்து வருகிறது. பல வெற்றிப்படங்களை தொடர்ந்து “சக்தித் திருமகன்” படமும் பிரம்மாண்ட வெற்றியடைய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன், நன்றி என்றார்.
தயாரிப்பாளர் மனோஜ் பெனோ பேசுகையில்,
விஜய் ஆண்டனியின் நண்பராக நான் பல மேடைகளை பார்த்துவிட்டேன், பல விஷயங்களை பகிர்துள்ளேன், அதனால் நான் பேசிய விஷயங்களை மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை. அதே சமயம், நான் எனக்கு மட்டும் தெரியும் என்று நினைத்த ஒரு விஷயம் இன்று இங்கு வருகை தந்திருக்கும் பலருக்கு தெரிந்துள்ளது. அதை தான் இங்கு பலரும் பேசினார்கள். இதை வைத்தே விஜய் ஆண்டனி அவர்கள் எவ்வளவு நண்பர்களை சம்பாதித்து வைத்துள்ளார் என்பதும் அவர் எந்த உயரத்தை அடைத்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.
நான் மருத்துவராக இருந்தாலும் சினிமா துறைக்கு வருவதற்கு முதல் காரணம் விஜய் ஆண்டனி. அதே போல், சிறு வயதிலிருந்தே பொய் சொல்ல கூடாது, ஏமாற்ற கூடாது என்றெல்லாம் நமக்கு சொல்லி கொடுத்து வளர்பார்கள். அப்படி நேர்மையாக வளர்ந்த ஒருவர் தான் விஜய் ஆண்டனி. அதற்கு, விஜய் ஆண்டனி அவரின் மனைவி பாத்திமா மற்றும் அவரது தாயார் மூவருக்கும் பெரும் பங்கு உள்ளது. மேலும், விஜய் ஆண்டனி வேறு யாரையும் அவருக்கு போட்டியாக நினைப்பது கிடையாது, அவருக்கு அவர் தான் போட்டி என்று நினைப்பவர். அது தான் அவரின் வளர்ச்சிக்கு காரணம். விஜய் ஆண்டனியை நினைக்கும் போது பெருமையாக உள்ளது அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சுனில் பேசுகையில்,
படத்தை பற்றி நான் பெரிதாக பேச மாட்டேன், அது ரகசியமாக இருக்கட்டும். 42 ஆண்டுகளுக்கு பின் நான் சென்னை வந்திருந்தேன், அப்போது சித்ரா லக்ஷ்மணன் சார் அவர்களுடன் ஒரு நேர்காணல் செய்திருந்தேன் அதை பார்த்துவிட்டு அருண் சார் என்னை அழைத்திருந்தார். நான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தேன், இப்போது 42 ஆண்டுகளுக்கு பின் கேமராவுக்கு முன் வந்திருக்கிறேன். இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்த அருண் பிரபு மற்றும் விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி என்றார்.
மாஸ்டர் கேசவ் ராஜ் பேசுகையில்,
இப்படத்தில் விஜய் ஆண்டனி சாரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அருண் சார் மிகவும் பொறுமையாக பேசுவார், நான் அவரின் அருகில் சென்று தான் பேச வேண்டியிருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என்றார்.