ஹிட்: தி தேர்ட் கேஸ் – விமர்சனம்

நடிப்பு: நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீனிவாஸ், அதில் பாலா, சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்தர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா, அதிவி சேஷ், கார்த்தி (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சைலேஷ் கோலானு
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
இசை: மிக்கி ஜே.மேயர்
தயாரிப்பு: வால் போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: பிரசாந்தி திப்பிரிநேனி – நானி
தமிழக வெளியீடு: சினிமாக்காரன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
’ஹிட் கேஸ்’ பட வரிசையில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் இது. இதில் நாயகனாக நடித்திருக்கும் நானியே இப்படத்தை தயாரித்திருக்கிறார். முந்தைய இரண்டு படங்களோடு ஒப்பிடும்போது, இந்த மூன்றாவது படத்தின் கதை, மிகவும் சீரியஸானது. அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் கொண்டது…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கண்டிப்பான போலீஸ் சூப்பிரண்டு அர்ஜுன் சர்க்கார் (நானி). இவர் HIT (Homicide Intervention Team) என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார்.
இவர் ஒரு நபரை ஆற்றங்கரையோர மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்க வைத்து, கொடூரமாக கொலை செய்கிறார். பின்னர் ஒன்றுமே தெரியாதவர் போல் அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார்.
இதுபோல் மீண்டும் ஒரு கொலையை அவர் செய்யும்போது, வர்ஷா (கோமளி பிரசாத்) என்ற சக பெண் போலீஸ் அதிகாரி பார்த்து, அவரை தடுக்க முயற்சி செய்கிறார். எனினும் அவருடன் சண்டையிட்டு, மடக்கி, அவரை கட்டிப்போடும் அர்ஜுன் சர்க்கார், அக்கொலையை செய்து முடித்துவிட்டு, ஏன் இக்கொலைகளை செய்கிறேன் என விளக்குகிறார்…
ஃபிளாஷ்பேக்கில், சில மாதங்களுக்கு முன், காஷ்மீரில் ஒரு கொடூர கொலை நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரணை செய்யும் அர்ஜுன் சர்க்கார், ஒரு சீரியல் கில்லரை கைது செய்கிறார். அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, பீகாரில் அதே பாணியில் கொலை நடக்க, அந்த கொலைகாரனையும் கண்டுபிடித்து, கைது செய்து இரண்டு கொலைகாரர்களையும் ஒன்றாக விசாரிக்கிறார் அர்ஜுன் சர்க்கார். அப்போது, ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்கிறது. அந்த வழக்குகளையும் விசாரிக்கும்போது, அதன் பின்னணியில் கொடூரமான ’கருப்பு உலகம்’ ஒன்று இருப்பது தெரிய வருகிறது.
அந்த ’கருப்பு உலகம்’ எங்கே இருக்கிறது? அதை இயக்குவது யார்? அவர்களது கொடூர கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்கும் அர்ஜுன் சர்க்கார் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அவற்றை அவர் எப்படி முறியடிக்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு குடம் குடமாக மனிதரத்தம் சிந்தி, விடை அளிக்கிறது ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, போலீஸ் சூப்பிரண்டு அர்ஜுன் சர்க்காராக நானி நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் என்றபோதிலும், படம் முழுக்க காக்கி உடை அணியாமல், சாதாரண உடையிலேயே வருகிறார். என்றாலும், காவல்துறை அதிகாரிக்கு உரிய கம்பீரம் மற்றும் விறைப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸான முகத்துடனே இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் மேனரிசம் கலந்து ருத்ர தாண்டவம் ஆடி, பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக, மிருதுளா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அழகாலும் நடிப்பாலும் கவர்கிறார். சிறிது நேரமே வந்தாலும், திரைக்கதையோடு பயணித்து, பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
பெண் போலீஸ் அதிகாரி வர்ஷாவாக வரும் கோமளி பிரசாத் கவனிக்க வைக்கிறார். நாயகன் தான் கொலையாளி என அவர் கண்டுபிடிக்கும் காட்சிகள் பரபரப்பு.
வில்லன் ஆல்ஃபாவாக வரும் பிரதீக் பாபர் மிரட்டியிருக்கிறார்.
நாயகனின் தந்தையாக வரும் சமுத்திரக்கனி, ஜம்மு – காஷ்மீர் ஏ.எஸ்.பி ரவியாக வரும் சூர்யா ஸ்ரீனிவாஸ், அம்மாநில சப்-இன்ஸ்பெக்டர் சுபைர் அகமது கானாக வரும் அதில் பாலா, விசாகபட்டினம் டிஜிபி நாகேஸ்வர ராவாக வரும் ராவ் ரமேஷ், ஹைதராபாத் எஸ்பி அபிலாஷாக வரும் மகந்தி ஸ்ரீநாத், சாமுவேல் ஜோசப்பாக வரும் ரவீந்திர விஜய், வில்லன் ஆல்ஃபாவின் சகோதரராக வரும் அமித் சர்மா, எஸ்பி கிருஷ்ணா தேவாக வரும் அதிவி சேஷ் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே திரையில் தோன்றி தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் இறுதியில் ஏசிபி வீரப்பனாக சிறப்புத் தோற்றத்தில் அடுத்த பாகத்துக்கான லீடாக நம்ம ஊர் முன்னணி நடிகர் கார்த்தி திடீரென தோன்றி வியக்க வைக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சைலேஷ் கோலானு. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் படமாக இதை கொடுத்திருக்கிறார். படம் துவங்கியவுடனே கதைக்குள் பார்வையாளர்களைப் பயணிக்க வைப்பதோடு, ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன என்ற கேள்வியோடு பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். கதை விசாகபட்டினத்தில் துவங்கி காஷ்மீர், பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப்பிரதேசம் என பல மாநிலங்களுக்குப் பயணப்பட்டாலும், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பார்வையாளர்களின் கண்களை மூடச்செய்யும் விதத்திலான ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மிக்கி ஜே மேயரின் இசை, சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு, கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்ல்லுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘ஹிட்: தி தேர்ட் கேஸ் – கதையில் உள்ள சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களுக்காக பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5