ஜாக்கி – விமர்சனம்
நடிப்பு: யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, சரண்யா ரவி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: டாக்டர் பிரகபல்
வசனம்: டாக்டர் பிரகபால், சூர்யா பாண்டியன், சூர்யா பாலா
ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார்
படத்தொகுப்பு: என்.பி.ஸ்ரீகாந்த்
இசை: சக்தி பாலாஜி
கலை: பாப்பநாடு சி உதயகுமார்
நடன அமைப்பு: அசார், ஐ ராதிகா, ரிச்சி
சண்டை அமைப்பு: பிரபு ஜாக்கி
தயாரிப்பு: ‘பிகே 7 ஸ்டூடியோஸ்’ பிரேமா கிருஷ்ணதாஸ், சி.தேவதாஸ், ஜெயா தேவதாஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
ஆட்டுக்கிடா முட்டுப் போட்டியில் வெற்றிபெறும் கிடாவின் உரிமையாளருக்கு வழங்கப்படும் மெடலின் பெயர் ‘ஜாக்கி’ என்பதால், கிடா முட்டுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு ‘ஜாக்கி’ என பொருத்தமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
மதுரை அருகே உள்ள ஆனைமலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் ராமர் (யுவன் கிருஷ்ணா). ஷேர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ராமர், ஆட்டுக்கிடா சண்டையில் மிதமிஞ்சிய ஆர்வம் கொண்டவர். அவர் ‘காளி’ என்ற பெயர் வைத்து, ஒரு ஆட்டுக்கிடாவை வளர்த்து வருகிறார். அந்த காளியை ’கிடா முட்டு போட்டி’யில் பங்கேற்க வைக்கிறார். எப்போதும் வெற்றி பெறும் கார்த்தியின் (ரிதான் கிருஷ்ணாஸ்) கிடாவுடன் ஒருமுறை காளி மோதி வெற்றி வாகை சூடுகிறது. இதை ஏற்க முடியாத கார்த்தி, தொடர்ந்து சூழ்ச்சிவலை பின்னி, ராமருக்கு தொல்லைகள் கொடுத்து, காளியை வெட்ட முயற்சிக்கிறார். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டுக்குத்து, அடிதடி நடந்துகொண்டிருக்கிறது. கிடா முட்டுப் போட்டி மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா முட்டுப் போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதைச் சொல்லுகிறது ‘ஜாக்கி’ திரைப்படத்தின் மீதிக் கதை.

நாயகன் ராமராக யுவன் கிருஷ்ணா நடித்திருக்கிறார். மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருப்பதோடு, தான் வளர்க்கும் கிடா போல் சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் அடிதடி என்று பயணிப்பவர், மறுபக்கம் நாயகியுடனான காதல் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தேர்ந்த நடிகராக ஜொலித்திருக்கிறார்.
வில்லன் கார்த்தியாக ரிதான் கிருஷ்ணாஸ் மிரட்டியிருக்கிறார்.
”கிடா சண்டை மட்டும் அல்ல, ரவுடியிசமும் பண்ண தெரியும்” என்று அதிரடி வசனங்கள் பேசி, தன் பங்கிற்கு திரையில் பெரும் அனலைக் கிளப்பியிருக்கிறார்.
நாயகி மீனாட்சியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
காளியாக வரும் ஆட்டுக்கிடாயையும், அதன் சண்டையையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
வஸ்தாவியாக வரும் மதுசூதன் ராவ், ஒத்தமுட்டுவாக வரும் சித்தன் மோகன், ஈஸ்வரியாக வரும் சரண்யா ரவி, பத்மனாக வரும் அய்யாவு, சுப்புவாக வரும் யோகி, சிவபாணமாக வரும் சாய் தினேஷ், ஜோன்ஸாக வரும் சிதம்பரம், மைக்காக வரும் பிரவீன், வசந்தாக வரும் ஆதவ், இனியாளாக வரும் ஈஷா உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் மதுரை மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர் பிரகபல். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா முட்டுப் போட்டியை மையப்படுத்திய கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் டாக்டர் பிரகபல், கிடா சண்டைப் போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. உண்மைச் சம்பவங்களை படமாக்கும்போது, அதை திரைமொழியில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை மிகச் சரியாக செய்திருக்கிறார். குறிப்பாக கிடா சண்டை மற்றும் போட்டிகளை மிக தத்ரூபமாக படமாக்கி சினிமா பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். கிடா சண்டை, அதன் மூலம் உருவாகும் பகை, என்ற கதைக்கருவுக்கு அமைத்திருக்கும் திரைக்கதையில் காதல், செண்டிமெண்ட் என்று பல அம்சங்கள் இருந்தாலும், படம் முழுவதும் ஆக்ஷன் மோடில் பயணிப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், நடிகர்களின் நடிப்பு மற்றும் கிடா சண்டை போட்டிகள் அந்த பலவீனத்தை மறைத்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளின் நிறத்தையும், அம்மக்களின் மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிடா சண்டை மற்றும் போட்டிகள் படமாக்கிய விதம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கிடா சண்டை போட்டிகளை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தை மிரட்டலாக மட்டும் இன்றி, உணர்வுப்பூர்வமாகவும் தொகுத்து திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்.
’ஜாக்கி’ – உண்மைக்கு நெருக்கமாகவும், தத்ரூபமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிடா முட்டுப் போட்டிகளுக்காக பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5
