கெவி – விமர்சனம்

நடிப்பு: ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, காயத்ரி, உமர் ஃபாரூக், காமன்மேன் கணேஷ், ஜெகத் ராமன், அபிமன்யு மீனா, வினோ நடுவன், ராம்போ விமல், இமைராஜ் குமார், சிதம்பரம் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தமிழ் தயாளன்
வசனம்: கிருபாகரன் ஏசய்யா – ராசி தங்கதுரை
ஒளிப்பதிவு: ஜெகன் ஜெயசூர்யா
படத்தொகுப்பு: ஹரி குமரன்
கலை: அறிவுமணி
இசை: பாலசுப்பிரமணியன் ஜி, ராஜா ரவிவர்மா
தயாரிப்பு: ’ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி’ மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா
தமிழ்நாடு ரிலீஸ்: ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
உயர்ந்தோங்கிய மலைகளில் வாழ்ந்துவந்த ஆதிக்குடிகள் முன்னேறி சமவெளிக்கு இடம் பெயர்ந்ததைப் போல, சமவெளியில் வாழ்ந்துவந்த குடிகள் பல்வேறு காரணங்களால் பின்நோக்கி நகர்ந்து மீண்டும் மலைகளுக்கு இடம் பெயர்ந்ததும் உண்டு என்கிறது மனிதகுல வரலாறு. இப்படி பின்நோக்கி நகர்ந்து மீண்டும் மலையில் வாழத் தொடங்கிய மக்களின் வாரிசுகளின் துயரக்கதை தான் இந்த ‘கெவி’.
பல நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையில் வாழ்ந்துவந்த மக்கள், ஆட்சியாளர்களின் இம்சையைத் தாங்க முடியாமல் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறினார்கள். அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து உயரே ஏறி, ஒரு ‘கெவி’ (’கெவி’ என்றால் ’அடிவாரம்’ அல்லது ’பள்ளம்’ என்று பொருள்.) பரப்பைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். தங்கள் வசிப்பிடத்துக்கு ‘வெள்ளக்கெவி’ என பெயர் சூட்டினார்கள். இந்த ஊராரைத் தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்கள் டோலி தூக்க வைத்து, மலையில் மேலும் சில கிலோ மீட்டர்கள் உயரே பயணித்து, கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள்.
அத்தகைய ‘வெள்ளக்கெவி’ ஊரார், அக்காலத்திலிருந்து கம்ப்யூட்டர்கள் கோலோச்சும் இக்காலத்திலும் சாலை, போக்குவரத்து, மருத்துவமனை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகிறார்கள். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஓட்டுக் கேட்பதற்காக மலை ஏறி வந்து இவர்களைச் சந்திக்கும் அரசியல்வாதிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதி அளிப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தபின் அவர்களும், அவர்கள் உறுதியளித்த அடிப்படை வசதிகளும் வெள்ளக்கெவியை எட்டிக்கூட பார்ப்பதில்லை. இப்போதும் வெள்ளக்கெவி மக்களின் இத்தகைய துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன…
கொடைக்கானலுக்கு சில கிலோ மீட்டர்கள் கீழே உள்ள மலைகிராமமான ’வெள்ளக்கெவி’ ஊரின் மேற்கண்ட தல வரலாறு ’வாய்ஸ் ஓவரில்’ ஒலிக்க, படம் ஆரம்பம் ஆகிறது
வெள்ளக்கெவியில் மலையன் (ஆதவன்) – மந்தாரை (ஷீலா) என்ற இளம் தம்பதியர் வசித்து வருகிறார்கள். ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாதபோதிலும், தங்களின் நற்பண்புகளால் அன்பாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். விளைவாக, மந்தாரை கர்ப்பமாக இருக்கிறார். பிறக்கப்போகும் குழந்தை பற்றிய ஏராளமான இனிய கனவுகளுடன் அந்த இளம் தம்பதியர் இன்பமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

ஒரு நாள் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வெள்ளக்கெவி ஊரார் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் 5 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஊரார் டோலி கட்டி அவர்களைச் சுமந்துகொண்டு 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் மருத்துவமனை நோக்கி ஓட்டமும், நடையுமாகப் போகிறார்கள். ஆனால் வழியிலேயே அந்த 5 பேரும் பரிதாபமாக இறந்துவிடுகிறார்கள். அது தேர்தல் காலம் என்பதால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ (காமன்மேன் கணேஷ்) ஓட்டுக்கேட்டு போலீஸ் அதிகாரி நரசிம்மன் (சார்லஸ் வினோத்) தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதிக்கு வர, மருத்துவமனை வசதி இல்லாததையும், அதனால் 5 பேர் இறந்ததையும் குறிப்பிட்டு மலையன் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மற்றும் போலீஸ் அதிகாரி நரசிம்மனுடன் வாக்குவாதம் செய்ய, அது மோதலில் முடிகிறது. இதனால், போலீஸ் அதிகாரி நரசிம்மன் மலையனை பழிவாங்கத் துடிக்கிறார்.
மறுநாள் வாக்குப்பதிவு நாளாக இருந்தபோதிலும், எம்.எல்.ஏ.வின் எச்சரிக்கையை மீறி, போலீஸ் அதிகாரி நரசிம்மனின் உத்தரவின் பேரில் போலீஸ்காரர்கள் மலையனை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டு போய், பயங்கர ரத்தக்காயங்கள் ஏற்படும் வகையில் அடித்து நொறுக்குகிறார்கள்.
அதே இரவில் மலையனின் மனைவி மந்தாரை பிரசவ வலி வந்து துடிக்கிறார். உள்ளூர் மருத்துவச்சியின் உதவியுடன் இயற்கையான சுகபிரசவம் நிகழ முடியாத அளவுக்கு, மந்தாரையின் வயிற்றுக்குள் குழந்தை ஏறுக்குமாறாக கிடப்பதால், தாய், சேய் இருவரது உயிருக்கும் ஆபத்து; உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தான் மந்தாரையையும் குழந்தையையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. எனவே ஊர்மக்கள் திரண்டு வந்து டோலி கட்டி, அதில் மந்தாரையைப் படுக்க வைத்து தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். வழியிலேயே பனிக்குடம் உடைந்து, உயிருக்குப் போராடுகிறார் மந்தாரை.
ஒரு பக்கம் போலீசாரின் கொலை முயற்சியில் சிக்கி மலையன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, மறுபக்கம் அவரது மனைவி மந்தாரை பிரசவிக்க இயலாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
பிறகு என்ன நடந்தது? மலையன் உயிர் தப்பினாரா? மந்தாரை பிரசவித்து அவரும் குழந்தையும் உயிர் பிழைத்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு ரத்தமும் சதையுமாக விடை அளிக்கிறது ‘கெவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக ஆதவன் நடித்திருக்கிறார். அறிமுக நடிகராக இருந்த போதிலும், நல்ல அனுபவம் மிக்க நடிகர் போல நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி மீது கட்டற்ற காதலைப் பொழிவது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் முகத்துக்கு நேரே ஆவேசமாக கேள்வி எழுப்புவது, போலீஸ் சித்ரவதையில் சின்னாபின்னமாவது, இறுதியில் தன் மனைவியையும், குழந்தையையும் பார்க்கத் தவிப்பது என அந்த கதாபாத்திரமாகவே மாறி உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி அசத்தியிருக்கிறார்.
அவரது மனைவி மந்தாரையாக ஷீலா நடித்திருக்கிறார். ஏற்கெனவே ‘டூ லெட்’, ‘மண்டேலா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ஷீலா, இந்த படத்தில் மந்தாரை கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். கணவரிடம் காதலுடன் கொஞ்சுவது, பிறக்கப்போகும் குழந்தை பற்றிய கனவில் மிதப்பது, உச்சக்கட்ட பிரசவ வலியில் துடிதுடிப்பது என சகல தருணங்களிலும் அச்சு அசலாக நடித்து, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
படத்துக்குப் படம் வில்லனாக வரும் சார்லஸ் வினோத், இந்த படத்திலும் கொடூர போலீஸ் அதிகாரி நரசிம்மனாக வந்து, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக வரும் காமன்மேன் கணேஷ், பொறுப்பற்ற சீஃப் டாக்டராக வரும் காயத்ரி, பொறுப்புள்ள ஜுனியர் டாக்டராக வரும் ஜாக்குலின் லிடியா, கம்பவுண்டராக வரும் ஜெகத் ராமன், மந்தாரையின் தம்பி கடுக்காவாக வரும் விவேக் மோகன், போஸ்ட்மேனாக வரும் உமர் ஃபாருக், வனத்துறை அதிகாரியாக வரும் ராம்போ விமல், கான்ஸ்டபிள்களாக வரும் இமைராஜ் குமார், சிதம்பரம், ஜீவாவாக வரும் தர்மதுரை ஜீவா, மீனாட்சியாக வரும் அபிமன்யு மீனா, சுருளியாக வரும் வினோ நடுவன் உள்ளிட்டோர் நிறைவாக நடித்து தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் தமிழ் தயாளன். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மலைகிராம மக்களின் வாழ்வியலை, உண்மைக் கதையை மையமாகக் கொண்டு, எவ்வித சமரசமும் இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களைத் திணிக்காமல், கசப்பான உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். மலையக மக்களின் துயர வாழ்க்கையை, சமவெளி மனிதர்களின் – குறிப்பாக நகர மாந்தர்களின் – இதயங்களில் சுருக்கென தைக்கும் விதத்தில் கதையாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள். இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் இது குறித்து ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மலையக மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்தால், அதுவே இப்படைப்பின் வெற்றியாக இருக்கும்.
கிருபாகரன் ஏசய்யா, ராசி தங்கதுரை ஆகியோரின் வசனங்கள் இயல்பை மீறாமலும், அதே நேரத்தில் மிகவும் கூர்மையாகவும் அமைந்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா இப்படத்தில் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். சிரமமான மலைப் பாதையிலும், மேடுபள்ளங்களிலும் பயணித்து, படம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிரேமையும் மிக கவனமாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக, இரவுக் காட்சிகளை இயற்கையான ஒளியிலேயே படம் பிடித்திருப்பது அற்புதம்.
பாலசுப்பிரமணியன் ஜி, ராஜா ரவிவர்மா ஆகிய இசையமைப்பாளர்கள் பாடல்களிலும், பின்னணி இசையிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
படத்தை தொய்வின்றி தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஹரி குமரன்.
‘கெவி’ – தரமான படைப்பு; அனைவரும் பார்த்து ஆதரிக்க வேண்டிய படம்!
ரேட்டிங்: 4/5.