சட்டமும் நீதியும் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

நடிப்பு: சரவணன், நம்ரிதா, அருள் டி சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம் மற்றும் பலர்
ரைட்டர் & ஷோ ரன்னர்: சூர்யபிரதாப் எஸ்
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
ஒளிப்பதிவு: கோகுலகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராவணன்
இசை: விபின் பாஸ்கர்
தயாரிப்பு: ’18 கிரியேட்டர்ஸ்’ சசிகலா பிரபாகரன்
ஓடிடி தளம்: ஜீ 5 ஒரிஜினல்
பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)
வலியோர், எளியோர் என்ற பேதம் இல்லாமல், சாதி, மதம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது தான் சட்டம். ஆனால், நடைமுறையில் அப்படி இருக்கிறதா? என்றால் ‘ஆம்’ என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில் வக்கீல்கள் எடுத்துரைக்கும் வாதங்களைப் பொறுத்து, வழங்கப்படும் நீதி மாறுபடுகிறது என்பது கண்கூடு. அதனால் தான் “சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஏழைக்கு எட்டாத விளக்கு” என்றார் பேரறிஞர் அண்ணா வேதனையுடன். பணக்காரர்களுக்கு மட்டும் அல்லாமல் ஏழைகளுக்கும் எட்டும் தூரத்தில் வக்கீல்களும், அவர்களது வாதங்களும் இருந்துவிட்டால், நீதி பரிபாலனம் எத்தனை நியாயமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பதைச் சொல்ல ‘ஜீ 5 ஒரிஜினல்’ ஓடிடி தளத்தில் வந்திருக்கிறது ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ் (இணையத் தொடர்).

நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு மரத்தடியில் மேசை – நாற்காலி போட்டு, டைப்ரைட்டர் சகிதம் அமர்ந்திருக்கிறார் ‘நோட்டரி பப்ளிக்’ எனப்படும் நோட்டரி வழக்கறிஞர் சரவணன். (கதையில் அவர் பெயர் – சத்திய மூர்த்தி.) ஐம்பது வயது மதிக்கத் தக்க அவர், வழக்குகளை எடுத்து நீதிமன்றத்தில் வாதாடத் துணிச்சல் இல்லாமல், மனுக்களை டைப் செய்து கொடுக்கும் பணி மட்டும் செய்து வருகிறார். அவரை சக வழக்கறிஞர்கள் ஏளனம் செய்கிறார்கள். வீட்டில் அவரது மகன் கூட அவரை மதிப்பதில்லை.
சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறமையாளரான சரவணனிடம் உதவியாளராக சேர விரும்புகிறார் பயிற்சி வழக்கறிஞர் நம்ரிதா. ஆனால், நீதிமன்றத்துக்குள் சென்று வாதாடாமல், வெளியே சாதாரண நோட்டரியாக இருக்கும் தன்னிடம் வேலையில் சேருவதால் எந்த பலனும் இருக்காது என்று மறுத்துவிடும் சரவணன், நம்ரிதா மன்றாடிக் கேட்பதால், அவருக்கு பரிந்துரைக் கடிதம் கொடுக்கிறார். சரவணனின் பரிந்துரைக் கடிதத்தைப் பார்க்கும் சீனியர் வழக்கறிஞர்கள் நம்ரிதாவைக் கேலி செய்தார்களே ஒழிய, அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை.
இந்நிலையில், சில இளைஞர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் என்று கோரி, கையறு நிலையிலிருக்கும் சாமானியரான ஒரு பெரியவர், நீதிமன்ற வளாகத்துக்குள் திடீரென தீக்குளித்து, பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொள்கிறார்.
வம்படியாக வந்து சரவணனிடம் உதவியாளராக சேர்ந்துகொள்ளும் பயிற்சி வழக்கறிஞர் நம்ரிதா தரும் ஆலோசனையின்படி, தீக்குளித்த பெரியவர் மற்றும் கடத்தப்பட்ட அவரது மகளுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்காகவும், தன் சக வழக்கறிஞர்கள் மற்றும் தன் குடும்பத்தினருக்கு தன் திறமையை நிரூபிப்பதற்காகவும், தீக்குளித்து மாண்ட பெரியவரின் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து பொது நல வழக்குத் தொடுக்கிறார் சரவணன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீதிமன்றத்திற்குள் செல்லும் சரவணனின் வாதத் திறமை எப்படி இருந்தது? அவரைத் தோற்கடிக்க அரசுத் தரப்பு வக்கீலும், போலீசும் கூட்டாகச் செய்யும் தகிடுதித்தங்கள் என்ன? அவற்றை தனது உதவியாளர் நம்ரிதாவின் உதவியோடு சரவணன் எப்படி முறியடித்தார்? தீக்குளித்து மாண்ட பெரியவர் யார்? அவரது பின்னணி என்ன? அவரது மகளைக் கடத்தியவர்கள் யார்? அந்த மகளின் கதி என்ன? இறுதியில் பெரியவருக்கும், அவரது மகளுக்கும் நீதி கிடைத்ததா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? ஊர் உலகத்துக்கும், தன் குடும்பத்துக்கும் தனது திறமையை சரவணன் நிரூபித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ்.
சத்தியமூர்த்தி என்ற வழக்கறிஞராக சரவணன் நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இத்தனை கச்சிதமாகப் பொருந்தி, இயல்பாக நடித்து, கைதட்டல்கள் பெற்றிருக்க முடியாது. பல ஆண்டுகால நடிப்பு அனுபவம் அவருக்கு அட்டகாசமாக கைகொடுத்திருக்கிறது. பாராட்டுகள் சரவணன்.
சரவணனின் உதவியாளராக, பயிற்சி வழக்கறிஞராக நம்ரிதா நடித்திருக்கிறார். துணிச்சலும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட துறுதுறு பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
அருள் டி சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த வெப் சீரிஸை சூர்ய பிரதாப் எஸ் மிகுந்த சிரத்தையோடும், கூர்மையான வசனங்களோடும், பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறார். இதை மிகக் குறைந்த நாட்களில் தரமும் நேர்த்தியும் குறையா வண்ணம் பாலாஜி செல்வராஜ் இயக்கி சாதனை புரிந்திருக்கிறார்.
விபின் பாஸ்கரின் இசை, கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ராவணனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கதையோடு இணைந்து, சிறப்பாக பயணித்திருக்கின்றன.
‘சட்டமும் நீதியும்’ – சுவாரஸ்யமான ‘கோர்ட் ரூம் டிராமா’; ’ஜி 5’ ஒரிஜினல் தளத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5.